"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது

Update: 2023-06-01 20:52 GMT

"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது.

பயிற்சி முகாம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்கள், தனியார் மெட்ரிக் பள்ளிக்கூட முதல்வர்கள் ஆகியோருக்கு மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த பயிற்சி முகாம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகள், என்னென்ன பட்டப்படிப்புகள், பட்டய படிப்புகள் உள்ளன, எந்த கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது, உயர்கல்வி முடித்த பிறகு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக "நான் முதல்வன்" திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் கல்வியாளர்கள் மூலமாக விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகளின் இடைநிற்றலை தடுப்பதுடன், தொடர்ந்து கல்வி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நுழைவு தேர்வுகள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 188 உயர்கல்வி, மேல்நிலை பள்ளிக்கூடங்களில் உயர்கல்வி வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் சார்பில் தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், முன்னாள் மாணவர்கள், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மூலமாக பள்ளிக்கூட மாணவர்களுக்கு வழிகாட்டப்படுகிறது. இதில் 1,776 உறுப்பினர்களுக்கு ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக ரூ.3 லட்சத்து 73 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 8 மாணவர்கள் சென்னையில் இலவசமாக ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

முதுநிலை ஆசிரியர்கள் 250 பேருக்கு உயர்நிலை வழிகாட்டுதல் சார்ந்த பயிற்சி மற்றும் கையேடுகள் வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மேல்நிலை பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு பயிற்சியாளர் அஸ்வின் கலந்துகொண்டு தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கூட முதல்வர்களுக்கும் பயிற்சி அளித்தனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குழந்தைராஜன், மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) ராமசாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்