அனுமதியின்றி செம்மண் அள்ளுவதை தடுக்க வேண்டும்

அனுமதியின்றி செம்மண் அள்ளுவதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கூறினர்.

Update: 2023-05-30 19:00 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குனர் அனுசுயா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரவிச்சந்திரன், இணை பதிவாளர் காந்திநாதன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர். அந்த கோரிக்கைகளுக்கு, அதிகாரிகள் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

செம்மண் அள்ளும் கும்பல்

லட்சுமணபெருமாள்:- விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும். ஒருசில இடங்களில் மிரட்டி நிலத்தை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது.

பெருமாள்:- ஒரு கும்பல் செம்மண், வண்டல்மண்ணை அனுமதி இல்லாமல் அள்ளி கடத்தி செல்கிறது. இதனால் இயற்கை வளம் நாசமாகி, நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் மண் கடத்தலை தடுக்க வேண்டும். விவசாயிகளின் நிலத்தை சர்வே செய்வதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

மாவட்ட வருவாய் அலுவலர்:- உதவி இயக்குனர் மூலம் ஆய்வு செய்து தாமதமின்றி சர்வே செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

பழனிவேல்:- நான் வாழைக்காய்பட்டியில் 5 வகையான கீரைகளை பயிரிட்டு வருகிறேன். உழவு பணிக்காக பவர் டில்லர் எந்திரம் வழங்க வேண்டும்.

கலெக்டர்:- பவர் டில்லர் எந்திரத்துக்கு உழவன் செயலியில் பதிவு செய்யலாம். அதை செய்ய இயலாதவர்கள் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கவேல்:- குஜிலியம்பாறை பகுதியில் காட்டெருமைகள் தண்ணீருக்காக விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதால் பயிர்கள் நாசமாகின்றன. இதை தடுக்க குளங்களை தூர்வாரி மழைநீரை தேக்க வேண்டும்.

கலெக்டர்:- குளங்களை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முருங்கை பவுடர் தொழிற்சாலை

ராமசாமி:- ரெட்டியார்சத்திரம் பகுதியில் 4 வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்கவில்லை. மாங்கரை ஆறு மூலம் 15 குளங்களுக்கு தண்ணீர் வரும். ஆனால் ஆறு முட்புதராக காட்சி அளிக்கிறது. எனவே ஆறு, குளங்களை தூர்வார வேண்டும். அழகுபட்டியில் 21 மாடுகள் இறந்ததில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு கடன் உதவி வழங்க வேண்டும்.

கலெக்டர்:- மாடுகளை இழந்தவர்களுக்கு கடன்உதவி வழங்க பரிசீலனை செய்யப்படும்.

பரமசிவன்:- குல்லலக்குண்டுவில் தோட்ட வேலைக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும். நிலக்கோட்டையில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

திட்ட இயக்குனர்:- தோட்ட வேலைக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை ஈடுபடுத்துவது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட வருவாய் அலுவலர்:- விவசாய குழு அமைத்து விவசாயிகளே முருங்கை பவுடர் தொழிற்சாலை தொடங்கலாம்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர்:- இயற்கை முறையில் முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகள் இணைந்து குழு தொடங்கினால் முருங்கை பவுடரை ஏற்றுமதி செய்யலாம்.

பயிர்கள் சேதம்

தங்கபாண்டி:- நிலக்கோட்டை ராமராஜபுரத்தில் கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு அனுமதி கிடைத்து 5 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கலெக்டர்:-கால்நடை பராமரிப்பு துறையினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்திவேல்:- சாணார்பட்டி குளத்தில் வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்களை அகற்றி தூர்வார வேண்டும்.

செல்லத்துரை:- மாம்பழ கூழ் தொழிற்சாலைகளில் உள்ளூர் விவசாயிகளிடம் மாம்பழம் வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். பிரதமரின் கிசான் திட்டத்தில் பல விவசாயிகளுக்கு உதவித்தொகை வரவில்லை.

கலெக்டரின் நேர்முக உதவியாளர்:- பிரதமரின் கிசான் திட்டத்தில் உதவித்தொகை வராதவர்கள், உதவி இயக்குனர் அல்லது எனது அலுவலகத்துக்கு வந்தால் வழிகாட்டுதல் செய்யப்படும்.

ராமசாமி:- குடகனாறு தண்ணீர் பிரச்சினை தொடர்பாக வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். விட்டல்நாயக்கன்பட்டி அருகே குடகனாற்று பாசன கால்வாயில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குடகனாறு அணையில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை தடுக்க வேண்டும்.

வெள்ளைக்கண்ணன்:- மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அனுமதி இல்லாமல் செம்மண் அள்ளப்படுவதை தடுக்க வேண்டும்.

அழகுகண்ணன்:- சத்திரப்பட்டியில் மழையால் மக்காச்சோள பயிர்கள் நாசமாகிவிட்டன. அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

கலெக்டர்:- பயிர்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

மேற்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்