அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் கலெக்டர் உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2023-10-19 18:45 GMT


கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஊரகப் பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள், சாலையின் மையப் பகுதிகள், பொது இடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள் மீது அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள், டிஜிட்டல் விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. விளம்பர பலகை, பேனர்கள் வரையறுக்கப்பட்ட இடங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட அளவுகளில் தான் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று வைக்க வேண்டும்.

உரிய அங்கீகாரமின்றி வைக்கப்படுகின்ற விளம்பர பலகைகள், பேனர்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. சில சமயங்களில் வாகன ஓட்டுநர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு, விபத்து ஏற்படவும், உயிர்ச்சேதங்கள் ஏற்படவும் வாய்ப்பாக உள்ளது. எனவே, முறையான அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மற்றும் பலகைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், உரிமம் பெறாமலும், உரிமக் காலம் முடிவடைந்த நிலையிலும் உள்ள விளம்பர பலகை, பேனர்களும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றத் தவறினால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே, அவற்றை அகற்றி தொடர்புடைய நிறுவனங்கள் அல்லது தனிநபர்களிடம் இருந்து அதற்குறிய செலவுத்தொகை வசூலிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்