ரெயில்வே கேட்டை திறக்க முடியாமல் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு ரெயில்வே கேட் திறக்க முடியாததால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Update: 2023-03-05 18:45 GMT

குழித்துறை, 

மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு ரெயில்வே கேட் திறக்க முடியாததால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

விரிகோடு ரெயில்வே கேட்

மார்த்தாண்டம்- கருங்கல் சாலையில் விரிகோடு பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட் ரெயில்கள் போகும் போது மூடப்படுவது பின்னர் திறப்பதும் வழக்கம்.

நேற்று மாலை 4.10 மணிக்கு குஜராத்தில் இருந்து திருவனந்தபுரம், குழித்துறை வழியாக திருநெல்வேலிக்கு சென்ற ஒரு ரெயிலுக்காக விரிகோடு ரெயில்வே கேட் மூடப்பட்டது. ெரயில் சென்ற சிறிது நேரத்தில் கேட்டை திறக்க ஊழியர் முயன்றார். ஆனால், கேட்டில் ஏதோ பழுது ஏற்பட்டு திறக்க முடியவில்லை.

இதுகுறித்து அந்த ஊழியர் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பாறசாலையில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ரெயில்வே கேட்டில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். அதன் பிறகு ரெயில்வே கேட் திறக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு வந்தது.

பயணிகள் அவதி

இதற்கிடையே ரெயில்வே கேட் திறக்கப்படாமல் பழுதாகி கிடந்ததால் மார்த்தாண்டம்-கருங்கல் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. கேட்டின் இரு பக்கமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

திங்கள்சந்தை, குளச்சல், கருங்கல் போன்ற பகுதிகளில் இருந்து மார்த்தாண்டம் சென்ற பஸ்களில் பயணம் செய்து வந்தவர்கள் விரிகோடு பகுதியில் இறங்கி சுமார் 1½ கி.மீ. தூரமுள்ள மார்த்தாண்டம் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்ற னர். கார் உள்ளிட்ட பிற வாகனங்களில் வந்தவர்கள் மாற்றுப்பாதையில் திரும்பி சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் விரைவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்