பாலியல் தொல்லை தாங்கமுடியாமல் விஷம் குடித்து பெண் தற்கொலை

செஞ்சி அருகே பாலியல் தொல்லை தாங்க முடியாமல் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2022-11-07 18:45 GMT

செஞ்சி

பாலியல் தொல்லை

செஞ்சி அருகே உள்ள மாத்தூர் திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தாட்சாயிணி(வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுரேஷ் திடீரென இறந்து விட்டாா். இதையடுத்து அதே ஊரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் சக்திவேல் என்பவர் தாட்சாயிணிக்கு போன் செய்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததார். ஆனால் இதற்கு தாட்சாயிணி மறுத்து விட்டார். ஆனால் சக்திவேல் தொடர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

தற்கொலை

இதனால் மனமுடைந்த தாட்சாயிணி வீட்டில் இருந்த கொக்கு மருந்தை தின்று மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தாட்சாயிணி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது அக்காள் துர்கா அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் சக்திவேல் கொடுத்த பாலியல் தொல்லையை தாங்க முடியாமல்தான் தாட்சாயிணி தற்கொலை செய்து கொண்டாதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்