உடுமலை சுற்றுப்புற கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-06-12 13:25 GMT


உடுமலை சுற்றுப்புற கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.இதற்கு தீர்வு காணாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகிறார்கள்.

கூட்டுகுடிநீர் திட்டங்கள்

அன்றாட அத்தியாவசிய தேவையில் முதன்மையும் முக்கியமானதாகவும் உள்ளது தண்ணீராகும். திறந்தவெளி கிணறு, ஆழ்குழாய் கிணறுகளை தேடி பலகிலோமீட்டர் நடந்து சென்று தலையில் சும்மாடு வைத்து குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து தாகம் தீர்த்த காலம் மருவி குடிநீர் திட்டங்களால் நாள்தோறும் குழாய் மூலமாக தண்ணீரை பெற்று வருகின்றோம்.

திருமூர்த்தி அணையில் உள்ள தளி கால்வாயை அடிப்படையாகக் கொண்டு உடுமலை, குடிமங்கலம், கணக்கம்பாளையம், பூலாங்கிணர், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டுகுடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே போன்று அமராவதி அணையில் பிரதான கால்வாய் மற்றும் அமராவதிஆறு மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணைகள் மூலமாக உடுமலை மடத்துக்குளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

தண்ணீர் பற்றாக்குறை

இந்த சூழலில் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் அணைக்கு நீராதாரமாக உள்ள ஆறுகள் முற்றிலுமாக நீர்வரத்தை இழந்துவிட்டது. இதன் காரணமாக அணைகளில் நீர்இருப்பு வேகமாக சரிந்து வருகிறது.இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

உயிர் வாழ்வதற்கு ஏற்ற அத்தியாவசிய பொருளாக உள்ள தண்ணீரை அணைகள் மூலமாக நாள்தோறும் பெற்று பயன் அடைந்து வருகின்றோம். கோடை காலம் தொடங்கி உள்ளதால் ஆறுகள் நீர்வரத்தை இழந்துவிட்டது.இதன் காரணமாக அணைகள் குறைந்தபட்ச நீர் இருப்புக்கு தள்ளாடி வருகின்றது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவி வருகின்றது.

அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா

இந்த சூழலில் குடிநீரைக் கொண்டு செல்லப்படும் குழாய்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதனால் உடைப்பு ஏற்படும்போது அதை உடனடியாக சீரமைப்பதற்கு ஏதுவாக இருக்கும். அத்துடன் தண்ணீரை வீணடிக்காமல் சீரான முறையில் பகிர்ந்து அளிப்பதற்கும் அதிகாரிகள் முன் வரவேண்டும்.

மேலும் கிராமப்புறங்களுக்கு வழக்கம்போல் வழங்கப்படுகின்ற தண்ணீர் சீரான முறையில் வினியோகம் செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அத்துடன் உடுமலை நகர் புறப்பகுதியில் வழங்கப்படும் தண்ணீரை பொதுமக்கள் சேதாரம் இன்றி பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். ஏனென்றால் ஒரு சிலர் தண்ணீரின் அருமை மகத்துவம் தெரியாமல் அதை கழிவுநீர் கால்வாயில் வீணடித்து வருகின்றனர்.

பொதுமக்கள் போராட்டம்

கிராமப்புறங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து வருவதால் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகளும் நகர்ப்புற மக்களுக்கு தாராளம் காட்டியும் கிராமப்புற மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுத்தியும் வருவது வேதனை அளிக்கிறது.

எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கிராமங்கள் தோறும் முறையாக ஆய்வு செய்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு சீரான முறையில் குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்