உடுமலை மத்திய பஸ் நிலையம் பின்புறம் உள்ள நடைபாதை உடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது.இரும்பு குழாய்களும் உடைந்துள்ளன. சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடைந்து கிடக்கும் நடைபாதை
உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் பின்புறம் பை-பாஸ் சாலை உள்ளது. இந்த பகுதியில் மத்திய பஸ்நிலையத்தை ஒட்டி மழைநீர் வடிகால் உள்ளது.
இந்த மழைநீர் வடிகாலின் பக்காவாட்டில், மழைநீர் செல்லுமளவிற்கு துளைகள் இடப்பட்டுள்ளன. இந்த மழைநீர் வடிகாலின் மேல்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு அதன்மீது ஸ்லாப்புகள் பதிக்கப்பட்டுள்ளன. இது நடைபாதையாக பயன்படுத்தப்படும்.
இதன் பக்கவாட்டில் இரும்பு குழாய்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய பஸ்நிலையத்தின் நுழைவு வாயிலின் கிழக்குபுறம், இந்த நடைபாதை தளம்பகுதி உடைந்து மழைநீர் வடிகாலுக்குள் கிடக்கிறது.
அதனால் இந்த இடத்தில், நடைபாதையில் வரும் பொதுமக்கள் தவறி விழுந்தால் விபத்துக்குள்ளாக நேரிடும். அதேபோன்று இந்த நுழைவு வாயிலின் மேற்கு பகுதியிலும் நடைபாதை உடைந்து, மழைநீர் வடிகாலுக்குள் கிடக்கிறது.
இரும்பு குழாய்கள்
அத்துடன் பக்கவாட்டில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு குழாய் உடைந்து, அதன் சில பகுதிகள் கூர்மையாக நீட்டிய நிலையில் தொங்கிக்கொண்டுள்ளது. அதனால் பழுதடைந்துள்ள நடைபாதையில் மராமத்து பணிகளை செய்யவேண்டும்.
பழுதடைந்துள்ள இரும்பு குழாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரி செய்யவேண்டும் என்று பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.