உடுமலையில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் மரங்கள் வேறுடன் சாய்ந்து விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன.

Update: 2022-07-30 16:09 GMT


உடுமலையில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் மரங்கள் வேறுடன் சாய்ந்து விழுந்ததில் வீடுகள் சேதமடைந்தன. இரும்பு மின்கம்பங்கள் வளைந்தன.

பலத்த காற்றுடன் மழை

உடுமலையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது.மாலை சுமார் 4½ மணியளவில் திடீரென்று பலத்தமழை பெய்தது. சுமார் ¾ மணிநேரம் மழை கொட்டியது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதில் உடுமலை பழனியாண்டவர் நகரில் இருந்து கொழுமம் சாலைக்கு செல்லும் சாலையில், நகராட்சி 30-வது வார்டுக்குட்பட்ட தாண்டா லே-அவுட் பகுதியில் சாலையோரம் இருந்த மிகப்பழமை வாய்ந்த மரம் வேறுடன்சாய்ந்தது.

இந்த மரம் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது விழுந்து சாலையின் மறுபுறம் உள்ள ஓட்டு வீடுகளின் மீது விழுந்தது. இதில் வீட்டின் முன்பகுதியில் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. வீட்டின் ஓடுகள் உடைந்தன.

மரம் சாய்ந்து மின்கம்பம் வளைந்தது

அப்போது அங்கு அந்த காம்பவுண்டுக்குள் வரிசையாக இருந்த 3 ஓட்டு வீடுகளில் 2 பெண்கள் உள்பட 5 பேர் இருந்துள்ளனர். ஓடு உடைந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த 2பேர் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், வீட்டிற்குள் இருந்தவர்களை பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர். அந்த இடத்தில் இருந்த 2 இரும்பு மின்கம்பங்கள் வளைந்தது. அந்த இடத்திற்கருகில் உள்ள வீதியில் ஒரு கான்கிரீட் மின்கம்பம் சாய்ந்து நின்றது. மரம் விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்து மின் கம்பிகள் தொங்கி கொண்டிருந்தது குறித்து அந்த பகுதியைச்சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறைமற்றும் மின் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் கிடைத்ததும் மின் ஊழியர்கள் மின் விநியோகத்தை உடனடியாக துண்டித்து விட்டு அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.அவர்கள் அந்த மின் கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின் கம்பங்களை நடுவதற்கான பணிகளை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இந்த பணிகள் தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்டபொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆர்.ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தீன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

கணக்கம்பாளையம் ஊராட்சி

இந்த மரம் விழுந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஜீவாநகர் பகுதியில் சாலையோரம் இருந்த மரம் வேறுடன் சாய்ந்து அங்கு, யாரும் குடியில்லாத சிமெண்டு சீட் வேயப்பட்டிருந்த வீட்டின் மீது விழுந்தது. அதற்கருகில் மற்றொரு மரமும் விழுந்தது. அங்கு கான்கிரீட் மின் கம்பம் முறிந்தது.

அதையடுத்துள்ள ஸ்ரீராம்நகர் பகுதியில் ராமசாமி நகர் சாலையில் ஒரு மரம் விழுந்தது. சாலையின் நடுவில் மரங்கள் விழுந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் விழுந்துள்ள தகவல் கிடைத்ததும் கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் லதா என்கிற காமாட்சி அய்யாவு சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்து மரங்களை அப்புறப்படுத்தத்தினர்.

மேலும் செய்திகள்