உடுமலை உழவர் சந்தையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உழவர் சந்தை
உடுமலை கபூர்கான் வீதியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை துறையின் மூலம் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை இந்த உழவர் சந்தைக்கு அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் 90 விவசாயிகள் வரை காய்கறிகளை கொண்டு வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் நேற்று உழவர் சந்தைக்கு 64 விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
அமைச்சர் திடீர் ஆய்வு
இந்த நிலையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று காலை 6 மணியளவில் திடீரென்று உழவர் சந்தைக்கு வந்தார். அவர் உழவர் சந்தையில் காய்கறிகடைகளுக்கு சென்று காய்கறிகள் விற்பனை குறித்தும், குறைகள் ஏதும் உள்ளதா என்றும் விவசாயிகளின் கருத்தை கேட்டறிந்தார். அப்போது சில விவசாயிகள், உழவர் சந்தைக்கு வெளியே சாலையோரம் சில காய்கறி வியாபாரிகள், உழவர் சந்தை செயல்படும் நேரம் வரை, காய்கறி கடைகளை வைத்து நடத்துகின்றனர்.
அதனால் உழவர் சந்தைக்குள் காய்கறிகள் விற்பனை குறைவதாகவும் கூறினர். அத்துடன் உழவர் சந்தைக்குள் குண்டும், குழியுமாக உள்ள நடைபாதைகளை சீரமைக்க வேண்டும் அல்லது பேவர்பிளாக் கற்களை பதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். உழவர் சந்தையில் சில காய்கறிகளை வாங்கிய அமைச்சர், அதற்கான பணத்தை அந்தந்த கடைகளில் விவசாயிகளிடம் வழங்கினார்.
மின்னணு தராசுகள்
உழவர் சந்தையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு 130 கல்தராசுகள் உள்ளன. இதுதவிர கடந்த சிலமாதங்களுக்கு முன்பு இந்த உழவர் சந்தைக்கு மின்னணு தராசுகள் 37 வந்துள்ளன. இவை உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது.
இனி, மேற்கொண்டு 50 மின்னணு தராசுகள் தேவைப்படுவதாக அமைச்சரிடம் உழவர் சந்தை அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர். அதற்கு அமைச்சர் உழவர் சந்தையின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். அத்துடன் உழவர் சந்தையின் செயல்பாடுகள் குறித்து உழவர் சந்தை அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது உடுமலை ஆர்.டி.ஓ.ஜஸ்வந்த்கண்ணன், தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தீன், உழவர் சந்தை வேளாண் அலுவலர் விஜயலட்சுமி, உதவி வேளாண் அலுவலர்கள் கண்ணன், சுதர்சன் ஆகியோர் உடனிருந்தனர்.