உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கான இருக்கைகள் அகற்றப்பட்டு குறைக்கப்பட்டதால் பயணிகள் நீண்டநேரம் நின்று சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மத்திய பஸ் நிலையம்
உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்குள் பயணிகள் உட்காருவதற்காக ஆங்காங்கு இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.பஸ் வரும்வரை பயணிகள் அந்த இருக்கைகளில் உட்கார்ந்து இருப்பார்கள். ஆனால் பயணிகளின் தேவைக்கேற்ப இருக்கை வசதிகள் இல்லை.
அதனால் பல பயணிகள், பஸ் வரும்வரை பஸ் நிலையத்திற்குள் உள்ள படிக்கட்டுகளில் உட்கார்ந்து இருப்பார்கள்.அந்த படிக்கட்டுகளில் கூட உட்கார இடம் கிடைக்காமல் பலர் நின்றுகொண்டிருப்பார்கள்.
இருக்கைகள் அகற்றம்
இந்த நிலையில் மத்திய பஸ் நிலையத்திற்குள் அமராவதி நகர், திருமூர்த்தி மலை ஆகிய இடங்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்குமிடத்தில் பயணிகள் உட்காருவதற்கு போடப்பட்டிருந்த சில இருக்கைகள் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஓரமாக வைக்கப்பட்டுள்ளது. அந்த இருக்கைகள் இருந்த இடத்தை வணிகபயன்பாட்டிற்காக சுத்தம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே பயணிகளுக்கான இருக்கை வசதிகள் குறைவாக உள்ள நிலையில், ஏற்கனவே பயணிகள் பயன்படுத்தி வந்த இருக்கைகளை அகற்றியதற்கு பயணிகள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அந்த இடத்தை வேறு பயன்பாட்டிற்கு விடாமல், இருக்கைகளை முன்பு போன்று அதே இடத்தில் வைக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.