உடுமலை நகராட்சி பகுதியில் எரியாத மின்விளக்குகளை கண்டறிய தானியங்கி கண்காணிப்பு கருவிகள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சாலைகளில் மின் விளக்குகள்
உடுமலை நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் பிரதான சாலைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இந்த சாலை பகுதிகளில் நகராட்சி சார்பில் ஏற்கனவே 3,475 வீதி விளக்குகள் உள்ளன. அவை நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த நகராட்சி நூற்றாண்டு விழா நினைவாக வளர்ச்சி திட்டப்பணிகளில் ஒன்றாக முக்கிய சாலைகளில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 450 பழைய மின் விளக்குகளுக்கு பதிலாக புதிய மின்விளக்குகள் பொருத்தபடுகிறது. மேலும் சாலையோரங்கள் மற்றும் மையத்தடுப்பு பகுதிகளில்புதியதாக மின் கம்பங்களை நட்டு மின்விளக்குகள் பொருத்த ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் புதிய மின் விளக்குகள் என புதியதாக மொத்தம் 1,276மின் விளக்குகள் பொருத்த திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது.
தானியங்கி கருவிகள்
இந்த நிலையில் மின் விளக்குகள் இரவு நேரங்களில் எரியும் வகையில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தானியங்கி கருவி பொருத்தப்பட்டு வருகிறது.சூரிய வெளிச்சம் குறைந்ததும் இந்த மின் விளக்குகள் தானாக எரியும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மின் விளக்குகள் எரிகிறதா, இல்லையா என்பதை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.அதன்படி ஒவ்வொரு மின்கம்பத்திலும் மின் விளக்குபகுதியில் தானியங்கி கண்காணிப்பு கருவி (ஐ.எல்.எம்) பொருத்தப்படுகிறது. இந்த கருவியை பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் வாயிலாக மின்கம்பங்களுக்கு எண்கள் கொடுக்கப்பட்டு, அவற்றை இணையதளம் வாயிலாக இணைத்து, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.அப்போது ஏதாவது இடத்தில் மின் விளக்கு எரியாமலிருந்தால் அதுகுறித்த தகவல் தெரியவரும்.இதைத்தொடர்ந்து எரியாத மின்விளக்கு எரிவதற்கான பணிகளை உடனடியாக செய்யமுடியும்.இந்த பணிகள் நகராட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பில் தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.