உதயநிதிக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது - அமைச்சர் பொன்முடி விளக்கம்

அரசியலில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் இருக்கக்கூடாது? என்று இருக்கிறதா என அமைச்சர் பொன்முடி கேட்டுள்ளார்.

Update: 2022-12-13 08:18 GMT

சென்னை,

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

"உதயநிதிக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஒன்றரை ஆண்டுக்கு முன்பே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் அந்த அளவுக்கு அவர் பணியாற்றினார்.

இளைஞர்கள், மாணவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டவர் உதயநிதி. ஒன்றரை ஆண்டுகள் தாமதமாகத்தான் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு எந்த துறையை வழங்குவது என்பது குறித்து முதல்-அமைச்சர் நாளை அறிவிப்பார்.

உதயநிதி திறமைமிக்க இளைஞர். சிறு வயதில் இருந்தே அவரை எனக்கு நன்கு தெரியும். திரைத்துறை, அரசியல்துறை என அனைத்திலும் சிறப்பாகச் செயல்படுபவர். சட்டமன்ற உறுப்பினராக சிறிது காலம் அவர் பயிற்சி பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் நினைத்துள்ளார்.

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் இளைஞராக உதயநிதி செயல்படுவார். உதயநிதியை அமைச்சராக்க வேண்டாம் என்று திமுகவில் யாரும் கூற மாட்டார்கள். வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு புதிது இல்லை. மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இது தெரியும். அரசியலில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் இருக்கக்கூடாதா? என்று இருக்கிறதா.

சட்டமன்றத்தில் 100 பேர் இருந்தால் அதில் 10 பேர் வாரிசாக தான் இருப்பார்கள், மீதமுள்ள 90 பேர் நேரடியாக வந்தவர்களாக தான் இருப்பார்கள். இது எல்லா கட்சியிலும், எல்லா இடத்திலும் இருப்பது தான் . அதில் ஒன்றும் தப்பில்லை.

இவ்வாறு

அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்