சென்னையில் 'பிங்க்' நிற பஸ் சேவை; உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இலவச பயணத்தை அடையாளம் காட்டும் வகையில் சென்னையில் 'பிங்க்' நிற பஸ் சேவையை உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை:
தமிழகத்தில் சாதாரண அரசு பஸ்களில் (வெள்ளை நிற போர்டு) பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதி அமலில் இருந்து வருகிறது. ஆனால் அவசரத்தில் சில பெண்கள் டீலக்ஸ், சொகுசு பஸ்களில் ஏறி விடுகின்றனர்.
இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பஸ்சின் நிறத்தை 'பிங்க்' நிறத்தில் மாற்றம் செய்யும் நடவடிக்கையை போக்குவரத்து துறை மேற்கொண்டது.
இந்த நிலையில் 'பிங்க்' நிற பஸ்கள் இயக்கத்தை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும் அவர், ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரி மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு 5 இணைப்பு மினி பஸ்கள் இயக்கத்தையும் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.