நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை உதய சூரியனுக்கு பெற்றுத்தர வேண்டும்: அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை உதய சூரியனுக்கு பெற்றுத்தர வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

Update: 2022-12-11 19:09 GMT

பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம்

கரூரில் மாவட்ட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி, எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமிசுந்தரி, துணை மேயர் தாரணிசரவணன் ஆகியோர் முன்னிலை வித்தனர். கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளரும், மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.வில் பொறுப்புகள் வழங்கப்பட வில்லை என்ற ஏக்கம் சிலருக்கு இருக்கும். இவ்வாறு விடுபட்டவர்கள் மாவட்ட கழகத்தில் மனுக்கள் பெற்று என்ன பொறுப்புகள் வேண்டும் என்பதை பூர்த்தி செய்து புகைப்படத்துடன் வழங்கிட வேண்டும் இதன் அடிப்படையில் அவர்களின் உழைப்புக்கு ஏற்ப கழக தலைவரிடத்தில் பரிந்துரைக்கப்படும்.

16-ந்தேதி பொதுக்கூட்டம்

பேராசிரியர் அன்பழகனின் 100-வது பிறந்தநாள் கூட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 33 பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. கரூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி வருகை தர உள்ளார். வருகிற 16-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அனைத்து நிர்வாகிகளும் வருகை தந்து சிறப்பு சேர்க்க வேண்டும்.

பேராசிரியர் பிறந்தநாள் அன்று மாவட்டத்திற்கு உட்பட்ட 1,047 இடங்களில் பேராசிரியர் அன்பழகன் படத்தை வைத்து மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி உறுதி எடுத்து கொள்ள வேண்டும். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி என அனைத்திலும் 100 சதவீத வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர்.

எனவே மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர்கள், மண்டல குழு உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட அனைவரும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு சிறப்பாக பணி ஆற்ற வேண்டும்.

சரித்திர சாதனை

பூத் கமிட்டி பொறுப்பாளராக நியமிக்கப்படுபவர்கள் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற முறையில் நியமிக்கப்படும்போது, 100 வாக்காளர்களையும் நன்கு தெரிந்து வைத்தவராக நன்கு பழக கூடியவராகவும், 100 வாக்காளர்களின் குறைகளை நேரில் சென்று களைந்து தேவைகளை பூர்த்தி செய்ய கூடியவராக இருக்க வேண்டும். கழகத்தின் மீது பற்று வேண்டும் அதேபோல் கட்டுப்பாடு வேண்டும். இவை இரண்டும் இயக்கத்தில் இருந்தால் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் வென்று காட்டி சரித்திர சாதனை செய்திட முடியும்.

உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை கொடுத்தார்களோ அதுபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகளிலும் இருக்க கூடிய 1,047 வாக்குச்சாவடிகளிலும் மூன்றில், இரண்டு பங்கு வாக்குகளை உதய சூரியனுக்கு பெற்று கொடுத்தோம் என்ற பெருமையை நாம் உருவாக்க வேண்டும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கி உள்ளார். அத்திட்டங்களை மக்களிடம் எடுத்து கூற வேண்டும். கரூர் மாவட்டம் தி.மு.க.வின் கோட்டை என்பதை உறுதி செய்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

கூட்டத்தில் தி.மு.க. தலைவராக 2-வது முறையாக பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது, ஜவளி ஏற்றுமதியை அதிகரிக்க கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்