கல்யாணரங்கநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை
திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் உதய கருட சேவை நடந்தது.
திருவெண்காடு;
திருவெண்காடு அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பஞ்சநரசிம்மர்களில் ஹிரண்ய, யோக நரசிம்மர்கள் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் இங்கு திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இந்த கோவிலில் பெருமாளுக்கு மாலை அணிவித்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலில் நேற்று உதய கருட சேவை உற்சவம் நடந்தது. இதையொட்டி பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், கணக்கர் ரத்தினவேல், வைணவ அடியார்கள் திரு கூட்டத் தலைவர் வக்கீல் ராமதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.