ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 வாலிபர்கள் கைது

வேலூரில் ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-20 17:17 GMT


வேலூர் கஸ்பா, சின்னஅல்லாபுரம் பகுதிகளில் பெண் உள்பட 3 பேர் வீடு, வீடாக சென்று ரேஷன்அரிசி வாங்கி, அவற்றை மூட்டைகளில் கட்டி ஆட்டோவில் ஆந்திராவிற்கு கடத்தி செல்வதாக வேலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் அலுவலகத்துக்கு நேற்று மாலை புகார்கள் வந்தன.

இதையடுத்து பறக்கும்படை தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையிலான குழுவினர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள சுற்றுலா மாளிகை அருகே அந்த வழியாக வந்த ஆட்டோக்களை சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆட்டோவில் வந்த பெண் திடீரென இறங்கி ஓட்டம் பிடித்தார். அதனால் சந்தேகம் அடைந்த குழுவினர் அந்த ஆட்டோவை மடக்கி அதில் இருந்த 2 பேரையும் பிடித்தனர். மேலும் ஆட்டோவில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது ரேஷன்அரிசி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் வேலூர் கஸ்பாவை சேர்ந்த அருண் (வயது 21), ஜெய் (21) மற்றும் தப்பியோடிய பெண் தேன்மொழி என்பதும், 800 கிலோ ரேஷன் அரிசியை காட்பாடி வழியாக ஆந்திராவிற்கு கடத்தி செல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து ஆட்டோ மற்றும் 2 பேரும் பாகாயம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய பெண்ணை தீவிரமாக தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி வேலூர் தொரப்பாடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்