தீர்த்தம் எடுக்க வந்தபோது ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு
மொடக்குறிச்சி அருகே தீர்த்தம் எடுக்க வந்தபோது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
ஊஞ்சலூர்:
மொடக்குறிச்சி அருகே தீர்த்தம் எடுக்க வந்தபோது என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.
தீர்த்தம் எடுக்க வந்தனர்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பள்ளபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவருடைய மகன் இளங்கோ (வயது21). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பெருமாநல்லூர் கிழக்கு சீராம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32). பனியன் கம்பெனி ஊழியர்.
இந்த நிலையில் கிழக்கு சீராபாளையம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக அந்த ஊரைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் சொந்த வாகனங்களில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மன்னாதம்பாளையம் குல விளக்கு அம்மன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றுக்கு நேற்று வந்தனர்.
2 பேர் சாவு
இவர்களுடன் இளங்கோவும், கோவிந்தராஜும் வந்திருந்தனர். அப்போது 2 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். இதனால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார்கள். இதை பார்த்த உடன் வந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுபற்றி மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஆற்றில் இறங்கி 2பேரையும் தேடி பார்த்தார்கள். இதில் இளங்கோவும், கோவிந்தராஜும் பிணமாக மீட்கப்பட்டனர்.
சோகம்
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த கோவிந்தராஜுக்கு கலைச்செல்வி (28) என்ற மனைவியும், பவித்ரா (6) என்ற மகளும், கபிலன் (2) என்ற மகனும் உள்ளனர். கோவில் கும்பாபிஷேகத்துக்கு தீர்த்தம் எடுக்க வந்த 2 பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.