மின்வாரிய ஊழியர் கொலையில் பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் கைது

நாசரேத்தில் மின்வாரிய ஊழியர் கொலையில் பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-26 16:34 GMT

நாசரேத்:

நாசரேத்தில் மின்வாரிய ஊழியர் கொலையில் பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மின்வாரிய ஊழியர் வெட்டிக்கொலை

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரைச் சேர்ந்தவர் ஆனந்தபாண்டி (வயது 51). இவர் நாசரேத் வைத்திலிங்கபுரம் துணை மின் நிலையத்தில் லைன்மேனாக பணியாற்றி வந்தார். கடந்த 22-ந்தேதி இரவு பணிக்கு சென்ற ஆனந்தபாண்டி, துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், மின்வாரிய அலுவலகத்தில் புகுந்து ஆனந்தபாண்டியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருள் மேற்பார்வையில் போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடினர்.

பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் கைது

போலீசாரின் விசாரணையில், நாசரேத் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான வாலிபரும், அவருடைய நண்பரான 16 வயதான பாலிடெக்னிக் மாணவரும் சேர்ந்து ஆனந்தபாண்டியை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

அதாவது, 17 வயதான வாலிபரின் தந்தை வயர்மேனாக பணியாற்றியபோது, டிரான்ஸ்பார்மரில் ஏறி வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். இதற்கு ஆனந்தபாண்டிதான் காரணம் என்று கருதிய வயர்மேனின் மகனான 17 வயது வாலிபர் தன்னுடைய நண்பரான பாலிடெக்னிக் மாணவருடன் சேர்ந்து ஆனந்தபாண்டியை கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆனந்தபாண்டி கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்