விபத்தில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்து சம்பவத்தில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் இறந்தனர்.
ராமேசுவரம்
வெவ்வேறு விபத்து சம்பவத்தில் மீன் வியாபாரி உள்பட 2 பேர் இறந்தனர்.
மீன் வியாபாரி
ராமநாதபுரத்தில் இருந்து நேற்று மதியம் ராமேசுவரம் நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. பாம்பனுக்கும்-தங்கச்சிமடத்திற்கும் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்த காரானது அக்காள்மடம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. மேலும் கார் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி செல்போனில் பேசிக்கொண்டு இருந்த மற்றொரு நபரின் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.
இதையடுத்து காரில் இருந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கார் மோதியதில் படுகாயமடைந்த பாம்பனை சேர்ந்த மீன் வியாபாரி பேட்ரிக் என்பவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அவர் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார்.
விபத்தை ஏற்படுத்திய கார் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதும், கார் வாங்கி 2 நாட்கள் தான் இருக்கும் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மற்றொரு விபத்து
திருப்புல்லாணி அருகே உள்ள நம்பியான் வலசையை சேர்ந்தவர் குமார் (வயது 47). மீனவர். இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தினைக்குளம் சென்று சாப்பாடு வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வேதகாரன்வலசை விலக்கு ரோடு பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் குமார் படுகாயம் அடைந்தார். அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரின் மகன் பிரகாஷ்குமார் (21) அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.