செம்பட்டி அருகே அணையில் மூழ்கி மாணவி உள்பட 2 பேர் பலி
செம்பட்டி அருகே அணையில் மூழ்கி மாணவி உள்பட 2 பேர் பலியானார்கள்.;
செம்பட்டி அருகே அணையில் மூழ்கி மாணவி உள்பட 2 பேர் பலியானார்கள்.
தி.மு.க. கிளை நிர்வாகி
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் பூஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 35). இவர், ஆத்தூர் கிழக்கு கிளை தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக இருந்தார். சித்த மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் அவர் பணிபுரிந்தார்.
அவருடைய அண்ணன் வேல்முருகன். அவரது மகள் தர்ஷினி (15). இவர், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் பூஞ்சோலை கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக, தர்ஷினி அங்கு வந்தார்.
இந்தநிலையில் செல்வக்குமார் தனது மனைவி பூங்கொடி (30), மகன் ராகுல் (8) ஆகியோருடன் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நேற்று மாலை குளிக்க சென்றார். அவர்களுடன் தர்ஷினியும் சென்றார்.
தண்ணீரிர் மூழ்கி 2 பேர் பலி
இதேபோல் திண்டுக்கல்லை சேர்ந்த செல்வக்குமாரின் நண்பர் ரவியின் மனைவி நாகேஸ்வரி, அவரது தாய் மற்றும் 2 குழந்தைகள் அணைக்கு குளிக்க வந்திருந்தனர். இரு குடும்பத்தினரும் அணையில் ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென நாகேஸ்வரி, தண்ணீரில் மூழ்கினார். இதனைக்கண்ட செல்வக்குமாரும், தர்ஷினியும் அவரை காப்பாற்ற முயன்றனர். இதற்கிடையே நாகேஸ்வரி கரைக்கு வந்து விட்டார். ஆனால் அவரை காப்பாற்ற முயன்ற செல்வக்குமாரும், தர்ஷினியும் தண்ணீரில் மூழ்கினர்.
இதனை பார்த்து அங்கிருந்து அனைவரும் அலறினர். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. தண்ணீரில் மூழ்கிய செல்வக்குமாரும், தர்ஷினியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உறவினர்கள் குற்றச்சாட்டு
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு படையினர் மற்றும் செம்பட்டி போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் அணையில் இறங்கி 2 பேரின் உடல்களையும் தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனைக்காக, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
இதற்கு செல்வக்குமாரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 2 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்ததை கண்ட நாகேஸ்வரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அங்கிருந்து காரில் சென்று விட்டனர். இதனால் அவர்கள் தான் 2 பேரின் சாவுக்கு காரணம் என்று செல்வக்குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
போலீஸ் விசாரணை
இதுதொடர்பாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசப்படுத்தினர். அதன்பிறகே 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அணையில் மூழ்கி மாணவி உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.