சாலை விபத்தில் இரு தரப்பினர் மோதல்; 3 பேர் காயம்-மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
பள்ளப்பட்டி அருகே சாலை விபத்தில் இரு தரப்பினர் மோதி கொண்டதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாக்குவாதம்
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே வேலம்பாடி ஊராட்சி அண்ணா நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி மகன் மணிகண்டன் (வயது 26). இவர் சொந்தமாக மினி வேன் வைத்து பல்வேறு இடங்களுக்கு வேனில் தண்ணீர் கொண்டு சென்று விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் மணிகண்டன் தனது மினிவேனில் சொக்கலாபுரம் சென்று தண்ணீர் ஊற்றி விட்டு மீண்டும் அண்ணாநகருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.அப்போது சொக்கலாபுரம் பிரிவு அருகே வந்தபோது மினிவேனுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக திடீரென்று வலது புறம் திரும்பி உள்ளார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த பள்ளப்பட்டி தமன்னா நகரை சேர்ந்த சாகுல் ஹமீது (36) மற்றும் அவரது மனைவி பேகம் (30) ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதனால் மணிகண்டனுக்கும், சாகுல் ஹமீதுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கைகலப்பு
அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த ஆட்டோ டிரைவர்களான பள்ளப்பட்டியை சேர்ந்த அலிபாஷா (35), மன்சூர்அலி (35) ஆகிய இருவரும், மணிகண்டனையும், சாகுல் ஹமீதுவையும் விலக்கி விட்டனர். அப்போது அலிபாஷா, மணிகண்டனை பார்த்து வண்டி எடுத்துக்கொண்டு போடா தம்பி என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் என்னை எப்படி போடா என்று சொல்லலாம் என கூறி அலிபாஷாவின் கன்னத்தில் கையால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.அப்போது அந்த வழியாக வந்த மணிகண்டனின் உறவினர்களான வேலம்பாடி அண்ணா நகரை சேர்ந்த கவின் (26), ராமச்சந்திரன் (29) ஆகிய இருவரும் சேர்ந்து அலிபாஷா மற்றும் மன்சூர்அலியை தாக்கினர். இதில் காயம் அடைந்த 2 பேரும் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையிலும், மணிகண்டன் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சாலைமறியல்
இச்சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்டு அலிபாஷா, மன்சூர்அலி ஆகியோரின் உறவினர்கள் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உங்களது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து 2 தரப்பினரும் தனித்தனியாக அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.