ஹிஜாவு நிறுவன மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

ஹிஜாவு மோசடி வழக்கில் மேலும் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2023-06-17 11:03 GMT

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தில் 'ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடேட்' நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 சதவீதம் வட்டித்தொகை வழங்கப்படும் என்று வெளியிடப்பட்ட கவர்ச்சியான அறிவிப்புகளை நம்பி ஆயிரக்கணக்கான நபர்கள் இந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தார்கள்.

ஆனால் வட்டி தொகையையும், முதலீடு செய்த பணத்தையும் முதலீட்டாளர்களுக்கு திரும்ப தராமல் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உள்ளிட்டோர் மோசடியில் ஈடுபட்டனர். பணத்தை இழந்த பொதுமக்கள் சென்னை அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் புகார்கள் அளித்தனர்.

அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிறுவனம் இதுவரை 89,000 பேரிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், சோதனையில் ரூ.3.34 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜாவு மோசடி வழக்கில் இதுவரை 52 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.41 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹிஜாவு மோசடி வழக்கில் மேலும் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஹிஜாவு நிறுவனத்தின் மேலாளராக இருந்து வந்த சுஜாதா காந்தா மற்றும் அவரது கணவர் கோவிந்தராஜுலு ஆகிய இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்