இரண்டு குழந்தைகளை கம்பியால் அடித்து கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

இரண்டு குழந்தைகளை கம்பியால் அடித்து கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்

Update: 2022-08-23 17:40 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே இரண்டு குழந்தைகளை கம்பியால் அடித்துக்கொன்ற தாயார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குழந்தைகள்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கனகசம்பத் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி ரேவதி என்கிற பேபி (40). இவர்களது மகள் ஹர்சிதா (13), மகன் கலைவேந்தன் (7). இவர்களுக்கு ஊரை ஒட்டியுள்ள தோட்டத்தில் சாளையில் மற்றொரு வீடும் உள்ளது. ஹர்சிதா அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பும், கலைவேந்தன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

ரேவதிக்கு தலைவலி இருந்து வந்ததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவருக்கு தலைவலி அதிகமாகும்போது மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் அவருடைய செயல்பாடு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் குழந்தைகள் இருவரும் சீருடையுடன், தோளில் புத்தகப்பையை சுமந்து கொண்டு வீட்டிற்கு வேகமாக வந்தனர். பின்னர் வீட்டில் சிறிது நேரம் விளையாடினர். மாலை 6 மணிக்கு கனகசம்பத் கடை வீதிக்கு சென்று விட்டார். இதனால் ரேவதியும், அவருடைய 2 குழந்தைகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.

இதையடுத்து தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ரேவதி ஊரை ஒட்டியுள்ள தோட்டத்து சாளை வீட்டிற்கு சென்றார். அப்போது ஒரு குழந்தை தாயின் இடது கையையும், மற்றொரு குழந்தை தாயின் வலது கையையும் பிடித்துக்ெகாண்டு சென்றனர்.

அடித்துக்கொலை

கடைவீதிக்கு சென்ற கனகசம்பத் இரவு 7மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது ஊருக்குள் இருந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து தோட்டத்து சாளையில் உள்ள வீட்டிற்கு தனது மனைவியும் குழந்தைகளும் சென்று இருக்கலாம் என நினைத்து தோட்டத்து சாளை வீ்ட்டிற்கு சென்றார். அங்கு தோட்டத்து சாளை வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து மனைவியின் பெயரை சொல்லி கதவை திறக்குமாறு கதவை தட்டினார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியே வீட்டிற்குள் எட்டிப்பார்த்தார். அப்போது அங்குள்ள கட்டிலில் ரேவதி படுத்துக்கிடந்தார். 2 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த கனக சம்பத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்றார். குழந்தைகளின் அருகில்இரும்பு கம்பி கிடந்தது. கட்டிலில் படுத்து இருந்த ரேவதியின் அருகில் விஷபாட்டிலும் கிடந்தது. அப்போது ரேவதி தனது கணவர் கனகசம்பத்திடம் 2 குழந்தைகளை கம்பியால் அடித்து விட்டு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகளையும், விஷம் குடித்த ரேவதியையும் மீ்்ட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 2 குழந்தைகளையும் பரிசோதனை செய்த டாக்டர்கள், அந்த குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ரேவதிக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் விசாரணை

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் பள்ளி முடிந்ததும் தோட்டத்து சாளைக்கு குழந்தைகளை அழைத்து சென்ற ரேவதி, அங்கு கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு இரண்டு குழந்தைகளையும், இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொன்று விட்டு, அவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற குழந்தைகளை தாயே கொடூரமாக கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

-------------------

கொலை செய்யப்பட்ட ஹர்சிதா

--------------

கொலை நடந்த வீடு.

Tags:    

மேலும் செய்திகள்