ரூ.2 கோடிக்கு விற்க முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு 2 பேர் அதிரடி கைது

கோவிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்க முயன்றதாக 2 பேரை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் அதிரடியாக கைது செய்து சிலைகளையும் மீட்டனர்.

Update: 2022-06-24 18:50 GMT

சென்னை,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே 2 ஐம்பொன் சாமி சிலைகளை ரகசியமாக பதுக்கி வைத்து ஒரு கும்பல் விற்க முயற்சிப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அந்த கும்பலை மடக்கிப்பிடித்து கைது செய்யும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி உத்தரவிட்டார். ஐ.ஜி.தினகரன் மேற்பார்வையில் சூப்பிரண்டு ரவி, கூடுதல் சூப்பிரண்டு மலைச்சாமி ஆகியோர் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் விருத்தாசலம் பகுதியில் முகாமிட்டு ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். திருட்டு சிலைகளை வாங்கும் வியாபாரிகளை போல வேடமிட்டு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் விருத்தாசலம் பகுதியில் நடத்திய விசாரணையில், அருகே உள்ள இருப்புகுறிச்சியைச் சேர்ந்த மகிமைதாஸ் (வயது 44), பெரியகோட்டிமுளை என்ற ஊரைச்சேர்ந்த பச்சமுத்து (44) மற்றும் அரியலூரைச் சேர்ந்த முருகானந்தம் ஆகியோர் சேர்ந்து 2 ஐம்பொன் சாமி சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்ய பேரம் பேசி வந்தது தெரியவந்தது.

சிலைகள் மீட்பு

மகிமைதாசை சந்தித்து ரூ.2 கோடியுடன் வந்திருப்பதாகவும், சிலைகளை காட்டுங்கள் என்றும் மாறு வேடத்தில் இருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். உடனே மகிமைதாஸ் அருகில் உள்ள வயல்வெளிக்கு வரச்சொல்லி, பெருமாள் சிலை ஒன்றையும், ஐந்து தலைநாகம் குடைபிடிப்பதை போன்ற தோற்றத்துடன் கூடிய மாரியம்மன் சிலை ஒன்றையும் காண்பித்தார். உடனே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தங்களது மாறு வேடத்தை கலைத்து, மகிமைதாசை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் வைத்திருந்த 2 சிலைகளையும் மீட்டனர். அடுத்து பச்சமுத்துவையும் அதிரடியாக கைது செய்தனர். முருகானந்தம் போலீஸ் கையில் சிக்காமல் தப்பி ஓடி விட்டார்.

எந்த கோவில்?

மீட்கப்பட்ட சிலைகள் இரண்டும் மிகவும் பழைமை வாய்ந்தது ஆகும். இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது முருகானந்தத்திற்கு தான் தெரியும் என்று கைதான இருவரும் கூறினார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. முருகானந்தத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்