த.வெ.க. மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது.
விக்கிரவாண்டி,
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகள் கடந்த 4-ந்தேதி பந்தல்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநாட்டிற்கு வருகிற தொண்டர்களுக்கு உணவு, குடிநீர் தடையின்றி வழங்கும் பணிகள் மற்றும் கழிப்பறை அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடு மேடை அமைக்கும் பணி சினிமா கலை இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் நினைவாக, மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயரத்தில் நிரந்தர கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. 27-ம் தேதி மாநாடு தொடங்கும் முன்பு திடலின் எதிரில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் விஜய் கொடியேற்றுகிறார். இதற்காக மணி என்பவருக்கு சொந்தமான இடத்தை ஐந்து ஆண்டுகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் குத்தகைக்கு எடுத்துள்ளது.
இந்த நிலையில் 100 அடி உயர நிரந்தர கொடிக்கம்பம் அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது. புயல், மழையைத் தாங்கும் வகையில் கொடிக்கம்பம் வடிவமைப்படுகிறது. 8 அடி ஆழத்தில் கொடிக்கம்பத்தின் அஸ்திவாரம் அமைக்கப்படுகிறது. கொடியின் பீடம் 120 சதுர அடி அளவில் அமைக்கப்படுகிறது.