தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில்உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வினியோகம் திங்கட்கிழமை தொடங்குவதாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வினியோகம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உறுப்பினர் சேர்க்கை
அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினராக புதுப்பித்துக் கொள்ளவும், புதிய உறுப்பினரை சேர்க்கவும் உறுப்பினர் படிவம் வினியோகத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடக்கிறது. அதே போன்ற தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் பகுதி கழகங்கள் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டம்
மேலும் மாலை 4 மணிக்கு திருச்செந்தூரில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்காத நகராட்சிநிர்வாகத்தை கண்டித்தும், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர வலியுறுத்தியும், திருச்செந்தூர் பகவத்சிங் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க நகரக் கழகத்தின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசுகிறேன். மேற்கண்ட நிகழ்ச்சிகளில் தலைமைக் கழக, மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகராட்சி பகுதி, பேரூராட்சி கழக நிர்வாகிகள், வட்ட கழக, கிளைக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.