தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

Update: 2023-05-25 18:45 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கருணாநிதி நூற்றாண்டு விழா

உறுப்பினர் சேர்க்கையில் இலக்கை எட்டி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். வருகிற 3-ந் தேதி முதல் ஆண்டு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. 3-ந் தேதி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த முன்னோடிகளுக்கு தொகுதி வாரியாக பொற்கிழி வழங்கப்படுகிறது.

கலைஞரின் எழுத்துகள், திராவிட கொள்கை, திட்டங்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்துக்கும் 4 நிகழ்ச்சிகள் என்ற அடிப்படையில் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு நடத்த வேண்டும்.

வெற்றிக்கனி

வருகிற 3-ந் தேதி பார்க்கும் திசை எல்லாம் கலைஞர் படமும், கழக கொள்கை விளக்க பாடல்களும் ஒலிக்க வேண்டும். அனைத்து கொடிக்கம்பங்களிலும் புதிதாக கொடியேற்ற வேண்டும். வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர, ஒன்றியங்களிலும் உள்ள கழகத்துக்கு சொந்தமான இடங்களில் கலைஞர் கருணாநிதி மார்பளவு சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது நூற்றாண்டு விழா மட்டுமின்றி நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்பாகவும் இருக்க வேண்டும். வெற்றிக்கனியை பறிக்க வேண்டும். நம்மை பற்றி தவறாக கூறும் எதுவும் எடுபடாது. சிலர் மக்களை குழப்ப பார்க்கிறார்கள். ஆகையால் நாம் அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை தந்து உள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வது, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆண்டு முழுவதும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது, வருகிற 3-ந் தேதி கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் தி.மு.க. கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும், கழக கொள்கை விளக்க பாடல்களை ஒலிபரப்பியும், உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்த வேண்டும், விளையாட்டு போட்டிகள், பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்துவது, தி.மு.க.வுக்கு சொந்தமான இடங்களில் அரசு அனுமதியுடன் மார்பளவு சிலை அமைப்பது, கிராமங்களில் தி.மு.க.வுக்கு சொந்தமாக உள்ள கட்டிடங்களில் நூலகங்கள் அமைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்