தூத்துக்குடி விசைப்படகுகள்கேரளா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லவில்லை
தூத்துக்குடி விசைப்படகுகள் கேரளாவில் மீன்பிடிக்க செல்லவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்க செயலாளர் ஜவகர் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி விசைப்படகுகள் கேரளாவில் மீன்பிடிக்க செல்லவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்க செயலாளர் ஜவகர் தெரிவித்து உள்ளார்.
தடைக்காலம்
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படும், ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி கடந்த 15-ந் தேதி முதல் 61 நாட்கள் மீன்படி தடைக்காலம் அமலுக்கு வந்து உள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழக கடற்கரையில் உள்ள அனைத்து விசைப்படகுகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கொச்சி துறைமுக அதிகாரிகள், தூத்துக்குடி, நாகப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகுகள் கேரள கடல் பகுதியில் மீன்பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
செல்லவில்லை
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்க செயலாளர் ஜவகர் கூறும் போது, தமிழகத்தில் 2 மாதம் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாது. இதனால் தூத்துக்குடி விசைப்படகுகள் கேரளா கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க வாய்ப்பு இல்லை.
தூத்துக்குடியில் இருந்து எந்த படகும் கேரளாவுக்கு செல்லவில்லை. இதனால் இரு மாநில மீனவர்கள் இடையே பிரச்சினை உருவாகும் நிலை உள்ளது. அதே நேரத்தில் கேரளாவில் இருந்து விசைப்படகுகள் தமிழக கடல் பகுதிக்கு வந்து மீன்பிடித்து செல்கின்றன. இன்று (அதாவது நேற்று) கூட தூத்துக்குடி கடல் பகுதியில் சுமார் 100 மீட்டர் ஆழத்தில் கேரள விசைப்படகுகள் சட்டவிரோதமாக தொழில் செய்து வருகின்றனர். ஆகையால் தமிழக அரசு உடனடியாக அந்த படகுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலோர காவல்படையினர் தடைக்காலம் அறிவிக்கப்பட்டு உள்ள பகுதியில் மீன்பிடிக்கும் கேரளா படகுகளை பிடிக்க வேண்டும் என்று கூறினார்.