அறுவடைக்கு தயாரான மஞ்சள்

பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள், அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

Update: 2022-12-31 18:45 GMT

விழுப்புரம்:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவில் கரும்பு, மஞ்சள் கொத்து போன்றவை முக்கிய இடம் பிடிக்கக்கூடியவை ஆகும்.

இதில் மங்கலப்பொருளாக விளங்கும் மஞ்சள் கிழங்கின் வாசனை, வீடு முழுவதும் மனம் வீசும் வகையிலும், பொங்கல் பானையை அலங்கரிக்கவும், பூஜையில் வைத்து வழிபடவும் மஞ்சள் கொத்து செடிகள் பயன்படுகின்றன.

அறுவடைக்கு தயாரான மஞ்சள்

இதற்கென விழுப்புரம் அருகே ஆலாத்தூர், சின்னக்கள்ளிப்பட்டு, மழவந்தாங்கல், சின்னமடம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள், தங்கள் நிலங்களில் மஞ்சள் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இவை தற்போது செழித்து வளர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரமே உள்ள நிலையில் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் மஞ்சள் உள்ளது.

இதுகுறித்து ஆலாத்தூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், எங்கள் பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் பயிரிடப்படும். இங்கு அறுவடை செய்யப்படும் மஞ்சள், விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். இந்த ஆண்டு பெய்த கனமழையினால் மஞ்சள் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மஞ்சள் கொத்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மஞ்சள் கொத்து செடிகளின் விலையை சற்று உயர்த்தி விற்பனை செய்தால் மட்டுமே மழையினால் ஏற்பட்ட இழப்புக்கு ஓரளவு ஈடுகட்ட முடியும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்