மஞ்சள் சாகுபடிக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்

மஞ்சள் சாகுபடிக்கு ஊக்கம் அளித்து சந்தைப்படுத்த அரசு உதவி செய்ய வேண்டும் என கறம்பக்குடி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update: 2023-01-03 18:50 GMT

பொங்கல் விழா

மஞ்சள் இன்றி விழாக்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தமிழர்களின் வாழ்வியல் கலாசாரத்தோடு ஒன்றி விட்ட பொருளாக மஞ்சள் உள்ளது. விழாக்களையும், கொண்டாட்டங்களையும் அர்த்தமுள்ளதாக உருவாக்கி தந்த நமது முன்னோர்கள் மிக சிறந்த கிருமி நாசினியான மஞ்சளை உணவு பொருளிலும் வழிபாட்டிலும் பயன்படுத்த கற்றுக் கொடுத்தனர்.

அறுவடை திருநாளான பொங்கல் விழாவில் நமது பண்பாடு மற்றும் கலாசாரத்தை போற்றும் வகையில் பொங்கல் பானைகளில் மஞ்சள் கொத்துக்களை கட்டி வழிபடுவது வழக்கம். மாட்டு பொங்கல் காணும் பொங்கல் போன்ற விழாக்களிலும் மஞ்சள் கொத்துக்கள் பயன்படுத்தபடுகிறது.

மஞ்சள் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் உள்ள மழையூர், கெண்டையன்பட்டி, துவார், ரெகுநாதபுரம், அம்புக்கோவில், வெள்ளாளவிடுதி, நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஓரளவு மழை பெய்து நிலத்தடி நீர்மட்டமும் குறைவின்றி கிடைத்துள்ளதால் மஞ்சள் செடிகள் நன்கு செழித்து வளர்ந்து உள்ளன.

கறம்பக்குடி பகுதி மண்ணின் தன்மைக்கு மஞ்சள் கிழங்குகள் நன்கு தரமானதாகவும், அடர்த்தியாகவும் இருப்பதால் வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் கறம்பக்குடிக்கு வந்து மஞ்சள் கொத்துக்களுக்கு முன்பணம் கொடுத்து வாங்கி செல்கின்றனர். பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மஞ்சள் கொத்துக்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன. கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்படும் மஞ்சள் பெரும்பாலும் பொங்கல் விழாவுக்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது.

விவசாயம் செழிக்கும்

உரிய வழிகாட்டுதல் இல்லாததால் ஈரோடு உள்ளிட்ட மஞ்சள் சந்தைகளுக்கு கறம்பக்குடி பகுதி விவசாயிகள் செல்வதில்லை. எனவே மஞ்சள் சாகுபடிக்கு அரசு ஊக்கமளித்து வேளாண்மை துறையின் மூலம் சந்தைப்படுத்த வழி செய்தால் மஞ்சள் விவசாயத்தின் பரப்பளவு அதிகரித்து விவசாயம் செழிக்கும் என கறம்பக்குடி பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மஞ்சள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-

அரசு உதவி செய்ய வேண்டும்

சுக்கிரன்விடுதியை சேர்ந்த ரெங்கசாமி:- மஞ்சள் உணவு, மருந்து மற்றும் அழகு சாதன பொருளாக இருப்பதால் பணப்பயிராக கருதப்படுகிறது. மஞ்சளில் விரலி மஞ்சள், குண்டு மஞ்சள் என இரண்டு வகை உள்ளது. இருப்பினும் எங்கள் பகுதியில் விரலி மஞ்சள் தான் சாகுபடி செய்யப்படுகிறது. மஞ்சள் விவசாயத்தில் வருமானம் என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் விழாவிற்கான மஞ்சள் கொத்துக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் அதற்கு முந்தைய 2 ஆண்டுகள் கடும் நஷ்டம் ஏற்பட்டது. மஞ்சள் கொத்துக்களை சந்தைகளிலேயே போட்டுவிட்டு வந்த நிலை உருவானது. எனவே மஞ்சளை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்த அரசு உதவி செய்ய வேண்டும்.

மிக சிறந்த கிருமி நாசினி

கறம்பக்குடியை சேர்ந்த முருகன்:- மஞ்சளின் மகிமையை கொரோனா காலகட்டத்தில்தான் மக்கள் உணர்ந்தனர். வீடு வாசல்கள் அனைத்தும் மஞ்சளாக இருந்தன. மிக சிறந்த கிருமி நாசினியான மஞ்சளை சாகுபடி செய்யும் விவசாயிகள் வறுமையில் வாடும் நிலைதான் உள்ளது. குழந்தையை சுமப்பது போல் 10 மாதம் பாடுபட்டு முறையாக சந்தை படுத்த முடியாமல் அவ்வப்போது நஷ்டம் அடைந்து வருகிறோம். விவசாயிகளை விட இடைத்தரகர்களும், வியாபாரிகளும் தான் லாபம் பார்த்து வருகின்றனர். இதனால் பெரும்பாலான மஞ்சள் விவசாயிகள் மாற்று விவசாயத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். எனவே மஞ்சள் சாகுபடிக்கு அரசு உதவி செய்வது அவசியம்.

விழிப்புணர்வு இல்லை

பட்டமாவிடுதியை சேர்ந்த செல்வராஜ்:- மஞ்சளை காய வைப்பது பதப்படுத்துவது, மதிப்பு கூட்டுவது குறித்து எங்கள் பகுதி விவசாயிகளிடம் எந்த விழிப்புணர்வும் இல்லை. எனவே 7 மாத பயிராக இருக்கும் போது பொங்கல் விழாவிற்கு மஞ்சள் கொத்துக்களை அறுவடை செய்து விற்பனை செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர். வாரம் ஒரு முறை முறையாக தண்ணீர் பாய்ச்சி, பூச்சி தாக்காமல் இயற்கை மருந்து தெளித்து மஞ்சள் பயிரிட்டு வந்தால் ஏக்கருக்கு 20 மூட்டைக்கு மேல் மகசூல் எடுக்க முடியும். எனவே எங்கள் பகுதியில் விளைவிக்கப்படும் மஞ்சளை ஈரோடு உள்ளிட்ட பெரு நகரங்களில் சந்தைப்படுத்துவதற்கான வசதிகளை அரசு செய்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்