திருப்பரங்குன்றம் ரெயில் நிலைய பகுதியில் சுரங்கப்பாதை- ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் ரெயில் நிலைய பகுதியில் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கடிதம் மூலம் வலியுறுத்துள்ளார்.

Update: 2023-09-22 00:36 GMT

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் ரெயில் நிலைய பகுதியில் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று மத்திய ரெயில்வே மந்திரிக்கு, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கடிதம் மூலம் வலியுறுத்துள்ளார்.

புதிய கட்டமைப்பு

திருப்பரங்குன்றம் தேவிநகர் பகுதியில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அகல ரெயில்பாதை அமைவதற்கு முன்பு வரை ஹார்விப்பட்டி, தேவி நகர், திருநகர், பாண்டியன் நகர் மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் காய்கறி வாங்க தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து சென்றனர். திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து திருநகரில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ரெயில் தண்டவாளங்களை கடந்து சென்று வருவதில் சிரமப்பட்டு வந்தனர். அதனால் சுரங்கப்பாதை அல்லது தண்டவாளத்தை கடந்து செல்லாதவாறு நடைபாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் திருப்பரங்குன்றம் ரெயில்வே நிலையத்தில் புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டது. மேலும் அகல ெரயில் பாதை செயல்படுத்த தொடங்கியது. அதனால் மக்கள் சென்று வந்த பாதை அடைக்கப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதியில் இருந்து முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும், தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் திருப்பரங்குன்றம் நகருக்குள் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.

இதனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்விற்கு கடிதம் எழுதினார். அதில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக சுரங்கப்பாதை அவசியமாக உள்ளது. ஆகவே மக்கள் நலன் கருதி சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இதற்கு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வுக்கு பதில் கடிதம் வந்துள்ளது. அதில் ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும் மாநில அரசுடன் கூட்டு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு சாத்திய கூறுகளின்படி செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்