சேகர் ரெட்டி மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகனுக்கு மாரடைப்பு - கவலைக்கிடம்

சேகர் ரெட்டி மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-20 02:11 GMT

சென்னை,

சேகர் ரெட்டி மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, கவலைக்கிடமான நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேகர் ரெட்டி மகளுடன் நிச்சயதார்த்தம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி. இவரது மகன் சந்திரமவுலி ரெட்டி (வயது 27). இவருக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவரும், தொழில் அதிபருமான சேகர் ரெட்டியின் மகளுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இருவருக்கும் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 26-ந் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருந்ததும், இதனை ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நடத்தி வைப்பதாகவும் இருந்தது.

இதையொட்டி, கடந்த சில நாட்களாக சந்திரமவுலி ரெட்டி தனது திருமண அழைப்பிதழை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று கொடுத்து வந்தார். இந்தநிலையில் சந்திரமவுலி ரெட்டிக்கு நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை

காவேரி ஆஸ்பத்திரி தரப்பில் நேற்று அவரது மருத்துவக்குறிப்பு வெளியானது. ஆஸ்பத்திரியின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள அந்த மருத்துவக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 18-ந்தேதி (நேற்று முன்தினம்) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சந்திரமவுலி ரெட்டி, காவேரி ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.பி.ஆர். பரிசோதனைகள் முடிந்த நிலையில், அவர் கேத் லேப் பிரிவில் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டு, இதய தமனியில் 'ஸ்டண்ட்' கருவி பொருத்தப்பட்டது.

உடல் உறுப்புகள் செயலிழந்து வரும் நிலையில் அவர் கவலைக்கிடமாக இருக்கிறார். அவரை ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இருவீட்டாரும் சோகம்

இக்கட்டான இந்த சூழலில் எங்களது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினர், உறவினர்களுடன் இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில் மணமகனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டது இருவீட்டாருக்கும் இடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்