சுனாமி தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும்

சிதிலமடைந்து விட்டதால் சுனாமி தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தினர்.

Update: 2022-05-18 19:03 GMT

நாகப்பட்டினம்:

சிதிலமடைந்து விட்டதால் சுனாமி தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தினர்.

மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் முகமது ஷாநவாஸ் (நாகை), நாகை மாலி(கீழ்வேளூர்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மீனவர்கள் பேசியதாவது:-

மேலபட்டினச்சேரி அமிர்தா நகரில் உள்ள படகு தளத்தை விரிவு படுத்த வேண்டும். படகு கட்ட ரூ.50 ஆயிரம் கடன் கேட்டால் அதனை தர வங்கிகள் மறுக்கின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழபட்டினச்சேரியில் ஐஸ் பிளாண்ட் அமைக்க வேண்டும். கடலுக்கு மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்தில் இடஒதுக்கீடு முறையில் மீனவர்களின் குழந்தைகள் படிக்கும் வகையில் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சுனாமி தொகுப்பு வீடுகள்

சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்க முதல் கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.

நம்பியார்நகரில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள சுனாமி தொகுப்பு வீடுகள் சிதிலம் அடைந்து வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

கீச்சாங்குப்பத்தில் சுனாமிக்கு பிறகு கட்டப்பட்ட வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. மீனவர்களுக்கு டீசல் மானியத்தை உயர்த்துவதுடன், டீசலையும் உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

துறைமுகம்

வேளாங்கண்ணியில், பாதாள சாக்கடை ஆற்றின் முகத்துவாரத்தில் கலப்பதை தடுக்க வேண்டும். மீன்பிடி இறங்குதளம் மற்றும் ஏலக்கூடம் அமைக்க வேண்டும்.

வெள்ளப்பள்ளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் துறைமுகம் அமைக்கும் பணியை விரைவுப்படுத்துவதுடன், சாலை, போக்குவரத்து, குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மீனவர்கள் தரப்பில் எடுத்து கூறப்பட்டது.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் ெதரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில், மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் 52 மீனவ பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியத்தில் ரூ.41 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் படகில் பொருத்தும் எந்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும், விபத்தில் இறந்த மீனவர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு காப்பீடு திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

அதேபோல, மரணமடைந்த மீனவர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழ்நாடு மீனவர் நலவாரிய நிவாரணத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6 லட்சத்து 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்