நடைப்பயிற்சி சென்ற பெண்களிடம் நகை பறிக்க முயற்சி
நெல்லை அருகே நடைப்பயிற்சி சென்ற பெண்களிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேட்டை:
நெல்லை அருகே நடைப்பயிற்சி சென்ற பெண்களிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நடைப்பயிற்சி சென்ற பெண்கள்
நெல்லையை அடுத்த பேட்டையைச் சேர்ந்தவர் தன்ஷீலா (வயது 75). இவருடைய உறவினர்களான கேரளாவை சேர்ந்த லீலாம்மாள் (63), அவருடைய சகோதரி லெஸ்சி (55) ஆகியோர் கண் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லைக்கு வந்தனர். இங்குள்ள தன்ஷீலாவின் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தன்ஷீலா, லீலாம்மாள், லெஸ்சி ஆகிய 3 பேரும் பேட்டை வீரபாகுநகர் ெரயில்வே பீடர் சாலையில் நடைப்பயிற்சி சென்றனர்.
நகை பறிக்க முயற்சி
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென்று லீலாம்மாள், லெஸ்சி ஆகியோர் அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களது நகைகளை இறுக பிடித்து கொண்டு கூச்சலிட்டனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து நகை பறிக்கும் முயற்சியை கைவிட்ட 2 மர்மநபர்களும் மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்களிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.