குள்ளஞ்சாவடி அருகேமதுவில் விஷம் கலந்து கொடுத்து டிரைவரை கொல்ல முயற்சிகள்ளக்காதலனுடன் மனைவி கைது

குள்ளஞ்சாவடி அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து டிரைவரை கொல்ல முயன்ற மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-31 19:48 GMT

குள்ளஞ்சாவடி, 

கணவரின் நண்பருடன் கள்ளத்தொடர்பு

பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், லாரி டிரைவர். இவரது மனைவி சங்கீதா (வயது 34). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சங்கீதா கூலி வேலைக்காக தனது பெற்றோர் ஊரான குள்ளஞ்சாவடி அருகே உள்ள தோப்புக்கொல்லை பகுதிக்கு அடிக்கடி பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் சிறுவத்தூரை சேர்ந்த வெங்கடேசனின் நண்பர் சண்முகம் (45), அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதில் சங்கீதாவுக்கும், சண்முகத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது. இதையடுத்து சண்முகம் தனது ஆட்டோவில் சங்கீதாவை அடிக்கடி தோப்புக்கொல்லைக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இதுபற்றி அறிந்த வெங்கடேசன், தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

விஷம் கலந்த மதுபானம்

இதையடுத்து இருவரும் குடும்பத்துடன் தோப்புக்கொல்லைக்கு சென்று வசித்து வந்தனர். இருப்பினும் சங்கீதா, செல்போனில் தொடர்பு கொண்டு சண்முகத்துடன் அடிக்கடி பேசி வந்தார். மேலும் இருவரும் தோப்புக்கொல்லையில் உள்ள வயல்வெளியில் தனிமையில் சந்தித்து பேசியதை நேரில் பார்த்து வெங்கடேசன் கண்டித்ததால், அவரை கொலை செய்ய சங்கீதா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று சண்முகம் மதுவில் விஷம் கலந்து சங்கீதா மூலம் வெங்கடேசனிடம் கொடுத்துள்ளார். அதில் விஷம் கலந்துள்ளது பற்றி அறியாமல் குடித்த வெங்கடேசன் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்காதலனுடன் மனைவி கைது

இதுகுறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சங்கீதாவையும், சண்முகத்தையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வெங்கடேசனை கொலை செய்ய முடிவு செய்து, மதுவில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சங்கீதா, சண்முகம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்