மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ராஜேஸ்குமார் எம்.பி. குற்றச்சாட்டு
இந்தியாவின் இருமொழி கொள்கைக்கு எதிராக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக நாமக்கல்லில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ராஜேஸ்குமார் எம்.பி. கூறினார்.
தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்து இருந்தார். இதையொட்டி நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பரிதி வரவேற்று பேசினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழகத்தில் இந்தி மொழியை நாங்கள் எதிர்க்கவில்லை. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தி மொழிப்பாடம் விருப்ப பாடமாக உள்ளது. விரும்புபவர்கள் அதை படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் பன்முக தன்மையை சிதைக்கும் வகையில் மத்திய அரசு முயற்சிக்கிறது.
பொது நுழைவுத்தேர்வு
உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான பார்லிமெண்ட் குழு அளித்துள்ள அறிக்கையில், மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்ற நிலைப்பாடு, இந்தி பேசாத மாநிலங்களின் உணர்வுகளுக்கு எதிரானது. இதைத்தான் தி.மு.க. எதிர்க்கிறது. தேசிய தேர்வு முகமை மூலமாக ஒரே பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்ற திட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதும், மாநில உரிமைகளை அடியோடு பறிக்க கூடியதாகவும், சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானதாகவும் உள்ளது. இது அனைவருக்குமான சமஉரிமை, சமவாய்ப்பு ஆகிய கோட்பாடுகளை அழிக்கக்கூடியது என்பதால் தி.மு.க. இந்த இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கிறது.
மேலும், மத்திய அரசின் யு.பி.எஸ்.இ. தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது. இது இந்தியை படித்தால் மட்டுமே வேலை என்கிற நிலையை உருவாக்கும். இதைத்தான் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். தற்போது இந்தியாவில், இந்தி பேசும் 13 மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலத்தவர்கள் தமிழக முதல்வரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, இந்தி திணிப்பை அவர்களும் எதிர்த்து வருகின்றனர்.
பாதுகாக்க முடியும்
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இருமொழி கொள்கையை கடைபிடிப்போம் என்றார். ஆனால் தற்போது மத்திய அரசு இருமொழி கொள்கைக்கு எதிராக இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. தாய்மொழியாம் தமிழை காத்தால் தான், தமிழ் இனத்தை பாதுகாக்க முடியும்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க செய்யாத பல சாதனைகளை, கடந்த ஓராண்டில் தி.மு.க அரசு செய்து உள்ளது. சுதந்திரம் அடைந்தது முதல் பாதை வசதி இல்லாத போதமலை கிராமத்திற்கு தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.9 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வசதிக்கான திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.ராமசுவாமி, மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் விமலா சிவக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காந்தி என்கிற பெரியண்ணன், வக்கீல்கள் அய்யாவு, வடிவேல் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.