போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விஷம் குடிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விஷம் குடிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோவிலாங்குளம் அருகே உள்ள குமிலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தூரான் மனைவி பேச்சியம்மாள் (வயது 70). இவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு வந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் அளித்த மனுவில் கூறியதாவது:-
எனக்கு சொந்தமான இடத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை உறவினர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வெட்டி வருகிறார். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனது இடத்திற்கான உரிய ஆவணங்கள் அனைத்தும் வைத்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர். உடனடியாக எனது நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது நிலத்தில் உடனடியாக மரங்களை வெட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். மேலும் தான் ஏற்கனவே தயாராக கொண்டு வந்திருந்த விஷத்தை எடுத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி விஷத்தை அவரிடம் இருந்து பறித்தனர்.
இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு உறுதி அளித்தார். மூதாட்டி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் விஷம் குடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:- பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதற்காகத்தான் நானே நேரிடையாக குறைதீர் கூட்டம் நடத்தி மனுக்களை வாங்கி தேவையான அதிகாரிகள் மூலம் விசாரித்து தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறேன். மனு அளித்தவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதா? என்று தொடர் விசாரணை நடத்தி புகார்தாரருக்கு தீர்வு கிடைக்கிறதா? என கண்காணித்து வருகிறோம்.
பொதுமக்களின் கோரிக்கைகளை உரிய முறையில் விசாரித்து தீர்வு காணப்படாவிட்டால் என்னிடம் கூறுங்கள். நான் நடவடிக்கை எடுக்கிறேன். அதனை மீறி தற்கொலை செய்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.