பாதாள சாக்கடை குழியில் டயர்கள் சிக்கியதால் நடுவழியில் நின்ற லாரிகள்
பாதாள சாக்கடை குழியில் டயர்கள் சிக்கியதால் நடுவழியில் லாரிகள் நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
பாதாள சாக்கடை
கோவை- திருச்சி ரோடு ஒண்டிப்புதூர் சாஸ்திரி நகரில் ஆயிரக் கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் அந்த ரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமின்றி பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களும் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பாதாள சாக்கடை பணிக்காக ரோட்டில் பள்ளம் தோண்டி குழாய் பதித்தனர். அந்த பணி முடிந்ததும் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டிய இடத்தில் மண் கொட்டி நிரப்பினர்.
டயர்கள் சிக்கின
அந்த ரோட்டில் நேற்று கிராவல் மண் ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று வந்தது. அதன் எதிர் திசையில் மற்றொரு லாரி வந்தது. இதனால் அந்த 2 லாரிகளும் சாலையில் ஓரமாக வந்தன. அப்போது அந்த லாரிகள் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டி மண் நிரப்பிய இடத்தை கடக்க முயன்றன.
அப்போது திடீரென்று கிராவல் மண் ஏற்றி லாரியின் பின்பக்க டயர்கள் மண்ணில் புதைந்து சிக்கின.இதனால் லாரியின் முன்பக்க டயர்கள் தூக்கின. இதனால் அந்த லாரி டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் லாரியில் இருந்து கீழே இறங்கி தப்பினார். அந்த லாரியில் கிராவல் மண் அதிகமாக இருந்தால் மீட்க முடிய வில்லை.
இது போல் மற்றொரு லாரியின் டயர்களும் குழியில் சிக்கின. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு லாரியில் இருந்த மண் கீழே கொட்டப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது.
முறையாக மூட வேண்டும்
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாதாள சாக்கடை குழியை சரியாக மூடாததால் விபத்து அபாயம் இருந்தது. இது பற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
இதனால் லாரியின் டயர்கள், மண் ணில் புதைந்து சிக்கி விபத்துக்குள்ளானது. எனவே ரோட்டில் தேடப்படும் குழிகளை முறையாக மூட வேண்டும். அப்போது தான் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றனர்.