பாதுகாப்பற்ற முறையில் மண் அள்ளி செல்லும் லாரிகள்

சீர்காழி அருகே பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் மண் அள்ளி செல்லப்படுவது விபத்துக்கு வழிவகுப்பதால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-10 18:45 GMT

சீர்காழி:

சீர்காழி அருகே பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் மண் அள்ளி செல்லப்படுவது விபத்துக்கு வழிவகுப்பதால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை விரிவாக்க பணி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் முதல் கருவி வரை புறவழிச்சாலையில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சாலை விரிவாக்க பணிக்காக சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் இரவு பகலாக மண்களை ஏற்றிக்கொண்டு பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் திருமுல்லைவாசல் முதல் சீர்காழி புறவழிச் சாலை வரை உள்ள சாலைகளில் இருபுறங்களிலும் லாரிகளில் எடுத்து செல்லப்படும் மணல்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் சிதறி கிடக்கும் மண்களால் தினம்தோறும் ஏராளமானோர் விபத்து ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர் எனவும் கூறினர்.

கோரிக்கை

இது குறித்து பல மாதங்களாக புகார் தெரிவித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அடிக்கடி சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வர்த்தக அணி மாநில துணை செயலாளர் விஜயரங்கன் தலைமையில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் புறவழிச் சாலைக்காக லாரிகளில் கொண்டு செல்லப்படும் மண்களை பாதுகாப்பாகவும் மணல் மீது படுதா போட்டு பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும். மேலும் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படும் மண் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பாதுகாப்பற்ற முறையில் மண்ணை ஏற்றிச் செல்லும் லாரிகளை கண்டித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்