லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருச்சி ரெயில்வே குட்ஷேட் லாரி உரிமையாளர்கள் டிரைவர்கள் சங்கம் சார்பில் நேற்று ரெயில்வே குட்ஷேட்டில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. மாநில பொருளாளர் சங்கர் தலைமை தாங்கினார். தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் வரும்போது போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்து மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விடுவார்கள். இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது லாரி ஓட்டுனர்கள் தான். முக்கிய பிரமுகர்கள் வரும் போது சில நேரங்களில் திருச்சி மாநகரை சுற்றி வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் லாரிகளில் கொண்டு வரும் பொருட்களை உரிய நேரத்தில் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனை தவிர்க்க திருச்சி மாவட்டத்திற்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் வரும்போது முன்கூட்டியே லாரி உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தால், எங்களது லாரிகளை திருச்சி ரெயில்வே குட்ஷேட் யார்டில் நிறுத்தி வைத்துக்கொள்வோம் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டம் 1 மணி நேரம் நடைபெற்றது. இதில் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் கலந்து கொண்டனர்.