கார் மீது லாரி மோதல்; அண்ணன்-தங்கை பலி

கோவில்பட்டி அருகே கோவிலுக்கு சென்று திரும்பியபோது கார் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை பலியானார்கள்.;

Update: 2023-04-14 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டி அருகே கோவிலுக்கு சென்று திரும்பியபோது கார் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை பலியானார்கள்.

அண்ணன்-தங்கை

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குலசேகரபேரி ஒத்தகடையைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் அப்பகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார். இவருடைய மகன் முகேஷ் (வயது 25). விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லியைச் சேர்ந்தவர் முத்து மகள் பேச்சியம்மாள் (17). இவர் பிளஸ்-1 படித்துள்ளார். உறவினர்களான இவர்கள் 2 பேரும் அண்ணன்-தங்கை உறவு முறையினர் ஆவர்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி அங்குள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றனர்.

கார்-லாரி மோதல்

பின்னர் நேற்று காலையில் முகேஷ் தனது காரில் பேச்சியம்மாளை மல்லியில் உள்ள அவரது வீட்டில் விடுவதற்காக அழைத்து சென்றார். கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலை அடுத்த நக்கலமுத்தன்பட்டி வளைவில் சென்றபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக காரின் மீது பயங்கரமாக மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் பேச்சியம்மாள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

உடல் மீட்பு

இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கும், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் ெதரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பேச்சியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இறந்த முகேஷின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி டிரைவரிடம் விசாரணை

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி டிரைவரான தென்காசி மாவட்டம் கீழ கரிசல்குளம் இந்திரா காலனியை சேர்ந்த செண்பகராஜ் மகன் முனீஸ்வரனிடம் (25) விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி அருகே கோவிலுக்கு சென்று திரும்பியபோது கார் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்