கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்; 2 பேர் கைது
கேரளாவில் இருந்து கழிவுகள் ஏற்றி வந்த லாரியை ஆலங்குளம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் பத்திரகாளியம்மன் கோவில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் அங்கு வந்து லாரியை சோதனையிட்டனர். அப்போது அதில் கழிவுகள் இருந்ததும், அவற்றை கேரளாவில் இருந்து கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து சுகாதார மேற்பார்வையாளர் கங்காரதன் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜோசன்ராஜ் (வயது 43), கழிவுகளை கொட்டுவதற்கு இடம் பார்த்துக் கொடுக்கும் புரோக்கர் ஆலங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம் (50) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சுமார் 10 டன் எடையுள்ள கழிவுப்பொருட்களுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.