லாரி-கார் மோதல்; சுற்றுலா பயணி பலி

கடும் பனிமூட்டம் காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வந்த கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-12-10 18:45 GMT

ஊட்டி, 

கடும் பனிமூட்டம் காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வந்த கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து

கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்தவர் மகானந்தன் (வயது 32). இவர் தனது உறவினர்கள் 3 பேருடன் காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். அதன் பின்னர் பைக்காரா படகு இல்லத்திற்கு சென்று, அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மற்ற இடங்களை சுற்றி பார்க்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டியை நோக்கி தலைகுந்தா பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மலைக்காய்கறிகளை ஏற்றி வந்த லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி விட்டது.

போலீசார் விசாரணை

இதில் காரில் பயணித்த மகானந்தன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காரில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லி ராணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக ஊட்டியில் கடந்த 2 நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக விபத்து நடந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்