கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்ததால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல்
கள்ளக்குறிச்சி நகைக்கடையில் 281 பவுன் நகைகளை கொள்ளையடித்தவர்கள் கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்ததால் குற்றவாளிகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்போன் இயக்கத்தை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 47). இவர் புக்கிரவாரி புதூரில் ஸ்ரீகுமரன் ஸ்வர்ண மகால் என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இந்த கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 281 பவுன் நகைகள் மற்றும் 30 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கடை அருகில் இருந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவின் இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் நகைக்கடையின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவின் இணைப்பை துண்டித்ததோடு, கடைக்குள் கம்ப்யூட்டரின் ஹார்ட்டிஸ்கையும் கழட்டி கையோடு கொண்டு சென்றுள்ளனர். இதனால் கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆய்வு
இதன் மூலம் கொள்ளையர்கள் திட்டப்பட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு இருந்த கேமராவில் கடந்த ஒரு வாரமாக பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்து அதில் சந்தேகப்படும் படி யாரேனும் சுற்றித்திரிந்தார்களா என் ஆய்வு செய்து வருகின்றர்.மேலும் புக்கிரவாரி புதூரில் கொள்ளையர்கள் தப்பிச்சென்றதாக கருதப்படும் சாலையில் வேறு ஏதேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா, அதில் கொள்ளையர்களின் முகம் பதிவாகியுள்ளதா எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுதவிர கொள்ளை சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் இயங்கி செல்போன்கள் பற்றிய விவரங்களையும் சேகரித்து அதன் மூலமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.