சம்பளம் வழங்காதது குறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை
கூடலூரில் தனியார் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத பிரச்சனை தொடர்பாக ஆர்.டி.ஓ. தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கூடலூர்
கூடலூரில் தனியார் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத பிரச்சனை தொடர்பாக ஆர்.டி.ஓ. தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
4 மாத சம்பளம்
கூடலூரில் தனியார் எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் புகார் தெரிவித்தது. இதனால் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள், தோட்ட நிர்வாகம் உறுதி அளித்தது.
இருப்பிடம் சம்பளம் வழங்காமல் தொடர்ந்து நிலுவையில் உள்ளதால் தொழிலாளர்கள் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட போவதாக எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித், ஏ.ஐ.டி.யூ.சி. மற்றும் தொழிலாளர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார்.
முத்தரப்பு பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று மதியம் 12.30 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் முகமது கனி, குணசேகரன் மற்றும் எஸ்டேட் நிர்வாக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் வருகிற 16-ந் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.
இது குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறும்போது, நிரந்தர தொழிலாளர்களுக்கு 4 மாத சம்பளமும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 10 வார கூலியும் வழங்கப்படாமல் உள்ளது. பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் சம்பளம் வழங்கவில்லை. இறுதியாக வருகிற 16-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் குடும்பத்துடன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.