தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா
தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழாவில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
அரக்கோணம், ஆக.6-
தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் முப்பெரும் விழாவில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு விழா, உலக நண்பர்கள் தின விழா மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும விழா ஆகிய முப்பெரும் விழா அரக்கோணம் விக்னேஷ் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரும், நீதிபதியுமான பாஸ்கரன், உலக நட்புறவு பேரவை தலைவர் மணிலால், மக்கள் உரிமை பாதுகாப்பு கழக மாநில தலைவர் சின்ராசு, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும சேர்மன் டி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருபவர்களுக்கு. விருதுகள் வழங்கப்பட்டன அதில் சிறந்த நிர்வாகிகளாக முருகன் பார்மஸி வெங்கடரமணன், கே.பி.கே.பிரபாகரன், முருகன் எக்ஸ்ரே லேப் சுந்தரராஜ், எழுத்தாளர் கவிஞர் சீ.மோகன் ஆகியோருக்கு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதியுமான பாஸ்கரன் விருதுகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து அவர் பேசுகையில், ''தமிழ் மூத்த மொழி, நம்முடைய தாய் மொழியாகும். உலகில் பல்வேறு மொழிகள் இருந்தாலும், உலகம் முழுவதும் ஆங்கிலம் இருந்தாலும் அவற்றுக்கு எல்லாம் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழி தெய்வ மொழி. அன்பு இருக்கும் இடத்தில் அருள் இருக்கும். தமிழ் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி தானாக வந்து சேரும்'' என்றார்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் மனோகர் பிரபு, பொருளாளர் லட்சுமிபதி, முன்னாள் ரோட்டரி நிர்வாகிகள் ஜி.மணி, மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் பி. இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.