இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் பீடி இலை பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-08-28 16:28 GMT

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கண்காணிப்பு

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள், களைக்கொல்லி மருந்துகள், மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தல் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைத்து பிரிவு போலீசாரும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பீடி இலை

இந்த நிலையில் தருவைகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தெற்கு கல்மேடு கடற்கரை பகுதியில் ஒரு கன்டெய்னர் லாரி நின்று கொண்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் 72 வெள்ளை சாக்கு மூட்டைகள் இருந்தன. அதனை பரிசோதனை செய்தபோது, சுமார் 1800 கிலோ பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் என்று கூறப்படுகிறது.

உடனடியாக போலீசார் லாரி டிரைவர் சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி, கிளீனர் மணிமாறன் (22) ஆகியோரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தெற்கு கல்மேடு பகுதியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து பீடி இலை மூட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்