2 படகுகளில் இலங்கைக்கு கடத்த முயன்ற 750 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 750 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 2 பைபர் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-01-04 18:47 GMT

பனைக்குளம், ஜன.5-

மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 750 கிலோ கடல் அட்டைகள் மற்றும் 2 பைபர் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடல் அட்டைகள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மண்டபம் கடலோர போலீசார் மற்றும் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் இணைந்து வேதாளை கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது வேதாளை தெற்கு கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 பைபர் படகுகளில் ஏறி சோதனை செய்தனர். அவற்றில் 40-க்கும் மேற்பட்ட சாக்கு மூடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 750 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்தது.

பறிமுதல்

இதைதொடர்ந்து சாக்கு பைகளில் இருந்த 750 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளையும் மற்றும் 2 பைபர் படகுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வேதாளையை சேர்ந்த முகமது(வயது 20) என்பரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். கடல் அட்டை மற்றும் பிடிபட்ட நபரையும் போலீசார் மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மண்டபம் வனச்சரகர் மகேந்திரன் தலைமையில் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேதாளையில் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் என்றும், இலங்கைக்கு கடத்த பைபர் படகுகளில் ஏற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தபோது, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்