5 மாத குழந்தையை விற்க முயன்றதாய்-பாட்டி உள்பட 4 பேர் கைது

தூத்துக்குடியில் 5 மாத குழந்தையை விற்க முயன்ற தாய், பாட்டி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-21 18:45 GMT

தூத்துக்குடியில் 5 மாத குழந்தையை விற்க முயன்ற தாய், பாட்டி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

தூத்துக்குடி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக குழந்தையை விற்பனை செய்ய இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரகு, தென்பாகம் தனிப்பிரிவு போலீஸ்காரர் ஆனந்த கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரூ.5 லட்சம் பேரம்

மேலும் போலீசார் மாறுவேடத்தில் குழந்தையை வாங்குவது போன்று நாடகமாடி பிடிக்க முடிவு செய்தனர். இதனால் புரோக்கரை தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது, புரோக்கர் ஒருவர் புதிய பஸ் நிலையம் பகுதியில் வரும்படி போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்றனர். அங்கு வைத்து குழந்தையை வாங்க வந்தது போலீசார் என்று தெரியாமலேயே அந்த புரோக்கர் பேரம் பேசினார். ரூ.2 லட்சத்தில் தொடங்கிய இந்த பேரம் ரூ.5 லட்சத்தில் முடிந்தது.

விற்பனை செய்ய முயற்சி

அதன்பிறகு தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோவில் அருகில் வைத்து குழந்தையை தருவதாக கூறிவிட்டு அந்த புேராக்கர் சென்றுவிட்டார். போலீசார் கோவில் அருகே காத்து இருந்தனர். அப்போது, அங்கு 3 பெண்கள் உள்பட 4 பேர் குழந்தையுடன் வந்தனர்.

அவர்கள் அங்கு மாறுவேடத்தில் நின்ற போலீசாரிடம் சென்று குழந்தையை காண்பித்து விற்பனை செய்ய முயன்றனர். அப்போது, தாங்கள் போலீஸ் என்று தெரிவித்ததால் அவர்கள் 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசார் சுற்றிவளைத்து 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

Tried to sell a 5 month old baby

4 people including mother and grandmother were arrested

அதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணர். இவருடைய மனைவி மாரீஸ்வரி (வயது 22). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை 8 மாதத்தில் பிறந்தது. இதற்கிடையே கலைவாணர் தனது மனைவியை பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் குழந்தையை வளர்க்க மாரீஸ்வரி சிரமப்பட்டு வந்தார். தனது குழந்தையை சில மாதங்களாக ஒரு காப்பகத்தில் விட்டுச் சென்றார்.

ஆசை வார்த்தை

இவர்களின் ஏழ்மை நிலையை அறிந்த குழந்தைகளை விற்கும் புரோக்கர்கள் மாரீஸ்வரி, அவரது தாயார் அய்யம்மாளிடம் பேசி குழந்தையை விற்பனை செய்யலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த மாரியப்பன் (44), 3-வது மைல் திரு.வி.க. நகரைச் சேர்ந்த சூரியம்மாள் என்ற சூரம்மா (75) ஆகியோரும் இருந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரீஸ்வரி, அந்த காப்பகத்தில் இருந்து மீண்டும் குழந்தையை வாங்கி வளர்த்து வந்தார்.

4 பேர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இவர்கள் 4 பேரும் புரோக்கர்கள் கூறியபடி தூத்துக்குடி வேம்படி இசக்கியம்மன் கோவில் அருகே மாறுவேடத்தில் நின்ற போலீசாரிடம் குழந்தையை விற்க முயன்ற போது சிக்கியுள்ளனர்.

மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையின் தாயார் மாரீஸ்வரி, அவரது தாயார் அய்யம்மாள், மாரியப்பன், சூரியம்மாள் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் குழந்தையை போலீசார் மீட்டு தூத்துக்குடியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பரபரப்பு

இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஈரோட்டை சேர்ந்த மேலும் 2 புரோக்கர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

----------------

Tags:    

மேலும் செய்திகள்