திருச்சி: வழக்கை சாதகமாக முடித்து தர ரூ.3,000 லஞ்சம் பெற்ற பெண் எஸ்.ஐ. கைது..!

திருச்சியில் மசாஜ் சென்டர் வழக்கை சாதகமாக முடித்து தர ரூ.3000 லஞ்சம் பெற்ற பெண் எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-07-17 09:49 GMT

திருச்சி,

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டரை நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது திருச்சி கண்டோன்மெண்ட் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த வழக்கை அஜிதாவிற்கு சாதகமாக முடித்து தருவதற்காகவும் மேலும் குண்டாஸ் வழக்குபதிவு செய்ய பரிந்துரை செய்யாமல் இருப்பதற்காகவும் ரூ.10,000 லஞ்சமாக, விபச்சார தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரெமா கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் அவ்வளவு தொகை தற்போது இல்லை என அஜிதா கூறியுள்ளார். இருந்த போதிலும் ரூ. 3000 கொடுத்தால் உனது வழக்கை உனக்கு சாதகமாக முடித்து தர முடியும் என்று கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அஜிதா, திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த அறிவுரையின்படி, அஜிதா, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரெமாவிடம் ரூபாய் மூன்றாயிரம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர் சக்தி வேல், சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பால முருகன் மற்றும் போலீசார் லஞ்சப் பணம் பெற்ற ரெமாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கைதான ரெமா விபச்சார தடுப்பு பிரிவில் கடந்த நான்கு வருடங்களாக பணியாற்றி வருகிறார். திருச்சி மாநகரத்தை பொருத்தவரையில் 60 ஸ்பா சென்டர்கள் இயங்கி வருகிறது. ஒரு ஸ்பா சென்டருக்கு மாதம் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ரெமோ தனது வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலம் மாதா மாதம் லஞ்ச மாகப்பெற்று தனது உயர் அதிகாரிகளுக்கும் பிரித்துக் கொடுத்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் எஸ்.ஐ. ரெமா உயர் அதிகாரிகள் யார் யாருக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளார் என்ற விபரங்களை லஞ்சம் கொடுத்தார் என்ற விசாரணையும் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்